செவ்வாய், அக்டோபர் 28, 2008

அருள்மிகு அழகுநாச்சியம்மன்


அருள்மிகு அழகுநாச்சியம்மன்

பருத்திப்பள்ளி அழகு நாச்சியம்மன் திருவடியை

சீலமுடன் கைதொழுது சேவித்தோர் - ஞாலமதில்

எல்லா நலன்களும் எய்தியே இன்பமுடன்

பல்லாண்டு வாழ்வார் பனைத்து


உலகங்களுக்கு எல்லாம் தாயாக விளங்கும் பராசக்தியானவள் அருள்மிகு அழகுநாச்சியம்மன் என்னும் திருநாமத்துடன் பருத்திப்பள்ளி செல்லன் குல கொங்கு நாட்டு வேளாளர் குடும்பங்களின் குலதெய்வமாக எழுந்தருளி அருள்புரிந்து வருகிறாள்.


மாதம் தோறும் அமாவாசையன்று அழகுநாச்சியம்மன் கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. தமிழ் வருட பிறப்பு, ஆங்கிலவருடபிறப்பு, ஆடி 18 ஆகிய நாட்களிலும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.


மாசி மாதம் அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெறும். மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதல், பூச்சாட்டியபின் நாள்தோறும் காலை மாலை அம்மனுக்குச் சிறப்புப் பூசை நடைபெறும்.


ஒன்பதாம் நாள் விநாயகர், அழகுநாச்சியம்மன், புவனேசுவரர் ஆகியோர் பருத்திப்பள்ளி நான்கு வீதிகளிலும் உலா வருவர். பின்னர் 10 ஆம் நாள் குதிரை துலுக்குதல் நடைபெறும். அம்மன் அழைப்புக்குப்பின் ஊஞ்சல் பாட்டுப் பாடும் நிகழ்ச்சி நடைபெறும்.


11 ஆம் நாள் வியாழக்கிழமை பொங்கல் வைப்பர். பின்னர் அபிசேக ஆராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். 12 ஆம் நாள் மஞ்சள் நீராட்டு நடைபெறும். அத்துடன் விழா முடிவு பெறும்.



வெள்ளி, அக்டோபர் 24, 2008

செல்லன் குலம் - வரலாறு

தமிழ்ப் பண்பாட்டின் விளைநிலமான கொங்கு நாட்டின் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சின்னமாக விளங்கும் கொங்கு வேளாளர் குலத்தில் ஒன்று செல்லன் குலம். செல்லன் என்ற குலமுதல்வரால் இக்குலம் பெயர் பெற்றது என்பர். செல்லம் என்பதற்கு அருமை, அன்பு, சுகம், செல்வம், அழகு, வளம், உயர்வு என்ற பல சிறப்பான பொருள்கள் உண்டு. செல்லன் குல காணிப் பாடலில் அனுமதை என்றும், அனும நகர் என்றும் சிறப்பிக்கப்படுவது அனுமன்பள்ளி. அவ்வூரே செல்லன் குலத்தாரின் முதல் காணியூராகும்.

கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் இருப்புலி என்ற பழம்பெரும் ஊர் உள்ளது. இருப்புலியில் செல்லன் குலத்தை சேர்ந்த புகழ்வாய்ந்த இளையாக் கவுண்டர் என்பவர் வாழ்ந்து வந்தார். பெரும் வள்ளல். இளையாக் கவுண்டருக்கு ஏழு ஆண்மக்கள் பிறந்தனர். ஏழு மக்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் வெவ்வேறு ஊர்களில் குடியேறினர். இருப்புலியில் ஒருவர் தங்கிவிட்டார் மற்றவர்கள் பருத்திப்பள்ளி, கொன்னையாறு, கோக்களை, அனுமன்பள்ளி, எழுமாத்தூர், நஞ்சை இடையாறு ஆகிய ஊர்களில் குடியேறி வாழ்ந்து வந்தனர். ஒரு தாய் மக்களான அவர்கள் ஏழு பேரும் எலுகரைச் செல்லன் குலம் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஏழு பேரும் ஒன்றாகக் கூடித் திருச்செங்கோட்டில் ஒரு மடம் கட்டிச் சமய, சமுதாயப்பணிகள் செய்து வருகின்றனர்.


எழுகரைச் செல்லன் குலத்தாரில் பருத்திப்பள்ளிச் செல்லன் குலத்தார் மட்டும் கொங்கு நாட்டு வேளாள கவுண்டர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வேளாள கவுண்டர் என்று அழைக்கப்படுகின்றனர். பருத்திப்பள்ளி உட்பட ஏழு ஊர்களில் தனித்தனியாகத் தங்கள் குல தெய்வங்களுக்குக் கோயில் கட்டி சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
ஏழுகரை செல்லன்குலத்தின் குல தெய்வம் மற்றும் அமைந்துள்ள இடம்:

1.அருள்மிகு அழகுநாச்சி அம்மன் - பருத்திப்பள்ளி

2.அருள்மிகு அத்தாயி அம்மன் - இருப்புலி

3.அருள்மிகு சின்ன அம்மன், பெரிய அம்மன் - அனுமன்பள்ளி

4.அருள்மிகு செல்லியம்மன் - கொன்னையாறு

5.அருள்மிகு கொன்காளியம்மன் - கோக்கலை

6.அருள்மிகு ராஜாசுவாமி, ராசாயி - நஞ்சை இடையாறு

7.அருள்மிகு பொன்காளியம்மன் - எழுமாத்தூர்


(நன்றி : கொங்கு நாட்டு வேளாளர் வரலாறு)